பதிவு செய்த நாள்
17
டிச
2011
11:12
மோகனூர்:"அசலதீபேஸ்வரர் கோவிலில், பக்தர்களின் வசதிக்காகவும், நிர்வாகத்தின் நலன் கருதியும், இந்து சமய அறநிலையத்துறையினரால், புதிய அர்ச்சகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என, கோவில் செயல் அலுவலர் சுதாகர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:மோகனூர், காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி மதுகரவேணி அம்பாள் சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில், பிரதோஷம், பவுர்ணமி, ஹோமகுண்ட வேள்விகள், நவக்கிரக பெயர்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவில் அர்ச்சகர் உமாபதி, தன்னிட்சையாக பணம் வசூல் செய்தது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், அர்ச்சகர் உமாபதி, நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டது கண்டறியப்பட்டது.அதை தொடர்ந்து, அவர், ஒரு வாரம், "சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்து அறநிலையத்துறை உதவி ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, "வரும் காலங்களில் நிர்வாகத்துக்கு எதிராக அர்ச்சகரின் செயல்பாடு அமையும் பட்சத்தில், எவ்வித விசாரணையும் இன்றி நிரந்தரமாக பூஜை பணியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார் என்ற நிபந்தனையுடன், உமாபதி பூஜை பணியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், கோவிலில் பூஜை பணிகளில் ஈடுபட்டு வந்த அர்ச்சகர் உமாபதி, நிரந்தரமாக பணியில் இருந்து, "டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, அசலதீபேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களில் வசதிக்காகவும், நிர்வாக நலன் கருதியும், இந்து அறநிலையத்துறையினரால், பரமேஸ்வரன் என்பவர், கோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.பக்தர்கள், திருக்கோவில் நிகழ்ச்சிகளுக்கு, நிர்வாகத்தை நேரடியாக அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.