ஊட்டி : பழநி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, பாத யாத்திரை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி பாதயாத்திரை குழு தலைவர் குமாரசாமி கலெக்டருக்கு அனுப்பிய மனு: நீலகிரி மாவட்டத்திலிருந்து ஆண்டுதோறும் பழநி, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவிலுக்கு ஏராளமானோர் பாதயாத்திரை சென்று வருகின்றனர். சாலையில் அதிகரிக்கும் வாகன நெரிசலால் பாதயாத்திரை பக்தர்களுக்கு சில நேரங்களில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட திருப்பூரில் இருந்து பழநிக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது பஸ் மோதி ஐந்து பேர் பலியாகினர்.இந்த சம்பவத்தை அடுத்து, பாத யாத்திரை பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், தனி பாதை அமைப்பதுடன், டிரைவர்கள் பக்தர்களின் நலன் கருதி வாகனங்களை வேகம் குறைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, குமாரசாமி கூறியுள்ளார்.