பதிவு செய்த நாள்
30
டிச
2017
04:12
கரூர்: கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷம் விண்ணைப் பிளக்க, முத்தங்கி அணிந்து, பரமபத வாசல் வழியாக வந்து, நம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடந்த, 19ல், பகல்பத்து நிகழ்ச்சியுடன், வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியது. தினந்தோறும் பல்வேறு அலங்காரங்களில், உற்சவ பெருமான் கோவிலில் திருவீதி உலா வந்தார். டிச 28-ல், 10ம் நாளில், மோகினி அலங்காரத்தில் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை, 4:30 மணிக்கு, முத்தங்கி அணிந்த நம் பெருமானை மூலஸ்தானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். கோவில் பிரகாரத்தைச் சுற்றி வந்து, சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வந்தடைந்தனர்.
அங்கு பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்பின், 5:30 மணிக்கு, பரமபத வாசல்
திறக்கப்பட்டது. பக்தர்களின் ரங்கா ரங்கா என்ற கோஷம் விண்ணைப் பிளக்க, நம்பெருமான் பரமபத வாசலை கடந்து சென்றார். கலெக்டர் கோவிந்தராஜ், உபயதாரர்கள் மற்றும் கோவில்
நிர்வாகிகள், சுவாமி தரிசனம் செய்து, பரமபத வாசல் வழியே வந்தனர். அதன் பின் உற்சவர், கோவில் வெளிப் பிரகாரத்தில் திரு வீதி உலா வந்து, கோவில் மண்டபத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசியையொட்டி, டிச 29-ல்,முழுவதும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராப்பத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. அடுத்த பத்து நாட்களுக்கு, மாலை வேலையில், தினமும் பல்வேறு அலங்காரங்களில், கோவில் பிரகாரத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கும். கடைசி நாளில், ஊஞ்சல் உற்சவம் நடக்கவுள்ளது.