பதிவு செய்த நாள்
01
ஜன
2018
10:01
ஊட்டி: நீலகிரியில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள், தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை, பாரம்பரியம் மாறாமல் கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில், தோடர், கோத்தர், காட்டு நாயக்கர், பனியர், இருளர் மற்றும் குறும்பர் இன பழங் குடியின மக்கள் வசிக்கின்றனர்; அவர்கள் வசிப்பிடம், ’மந்து’ எனப்படுகிறது.மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமைக்குரிய இவர்கள், தங்களின் பாரம்பரியம், கலாசாரம் மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். உடை, உணவு முறை, வழிபாடு, திருமணம், இறப்பு என, தங்களின் அனைத்து வாழ்வியல் நிலையிலும், தங்கள் முன்னோர் விட்டுச்சென்ற பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், நீலகிரியில் வாழும் தோடர் இன மக்கள், ஆண்டுதோறும், டிச.,31ம் தேதியை, தங்களின் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்; அவர்களது மொழியில், ’மொற்பர்த்’ என, அழைப்படுகிறது. தோடர் மக்களின் வழிபாட்டுக்கு உகந்த நாளாக, ஞாயிற்றுக் கிழமை கருதப்படுவதால், டிச.,31ம் தேதியை ஒட்டி வரும் ஞாயிற்றுக் கிழமைகளில், புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. தோடர் இன மக்களின் தலைமை மந்தாக கருதப்படும், ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்துவில், நேற்று புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுக்க உள்ள தோடர் மந்துகள், ’கிளான்’ எனப்படும், 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன; அப்பகுதிகளில் வசிக்கும், தோடர் இன மக்கள் விழாவில் பங்கேற்றனர். காலை, 11:30 மணிக்கு, குல தெய்வ கோவிலில் உள்ள, ’மூன்பவ், அயன்ஓவ்’ தெய்வங்களுக்கு, வழிபாடு நடத்தினர். பின், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலைக்கு ஒரு ரூபாய் காணிக்கை செலுத்தினர். தங்களின் பாரம்பரிய உடையணிந்து, ஆடல், பாடலுடன் விழாவை கொண்டாடினர். விழாவின் தொடர்ச்சியாக, இன்று, தங்களின் வளர்ப்பு எருமைகளை வழிபட்டு, அவற்றுக்கு உப்பு வழங்கும் நிகழ்ச்சி நடக்கும். இதன் தொடர்ச்சியாக, தோடர், ’கிளான்’களில், ’மொற்பர்த்’ பண்டிகை கொண்டாடப்படும்.