கூடலூர் : கூடலூர் அருகே தம்மணம்பட்டி ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி செலுத்த வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையால் இரு மாநிலங்களிலும் நடத்தி வரும் பல்வேறு போராட்டங்களினால், கடந்த 5ம் தேதி முதல் குமுளி வழியாக செல்லும் வாகனப்போக்குவரத்து தடைபட்டது. இதனால், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் இவ்வழியே செல்ல முடியவில்லை. தொடர்ந்து போராட்டம் நீடித்ததால் வாகனப்போக்குவரத்தும் கடந்த 10 தினங்களாக குமுளி மலைப்பாதையில் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், குமுளி வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது மட்டுமின்றி கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் பலர் கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டி, சுருளி அருவி, சண்முகநாதர் கோயில் உள்ளிட்ட பகுதியில் இருமுடி செலுத்தி விரதத்தை முடித்தனர். தொடர்ந்து போக்குவரத்து தடை இருப்பதால், தேனி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில்லை என முடிவு செய்து, கூடலூர் அருகே உள்ள தம்மணம்பட்டி ஐயப்பன் கோயிலுக்கு சென்று இருமுடியை செலுத்தி வருகின்றனர்.