பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
கழுகுமலை : கழுகுமலை அருகே ஷீரடி சாயிபாபா கோயிலில் வருடாந்திர மூன்றுநாள் திருவிழா நடந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் முதன்முறையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை குமாரபுரம் கிராமத்தில் ஷீரடி சாயிபாபா கோயில் எழுப்பப்பட்டது. அதுமுதல் அக்கோயிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் பவுர்ணமி சிறப்பு பூஜையும், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் மூன்று நாட்கள் திருவிழாவும் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மூன்று நாட்கள் திருவிழா சாயிபாபா கோயில் துவாரக மாயி சந்நிதியில் நடந்தது. இதில் முதல் நாளன்று விநாயகர், ராகு மற்றும் கேது, மஹாலட்சுமி, பாபா மற்றும் அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தன. தொடர்ந்து ஓம்காரம், சுப்ரபாதம், பாபாவின் அஷ்டோத நாமவழி எனப்படும் 108 திருநாமங்கள் ஆகிய பஜனைகள் நடந்தன. மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தன. இரண்டாம் நாளன்று அனைத்து சுவாமி சந்நிதிகளிலும் புனிதநீர் தெளித்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து கழுகுமலையை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபாடுகள் செய்தனர். மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தன. மூன்றாம் நாளன்று அனைத்து சுவாமிகளுக்கும் அனைத்து வகையான சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு 108 திருநாமங்கள் நடந்தன. மாலையில் சிறப்பு பூஜையும், மஹாமங்கள ஆரத்தியும் நடந்தது. தூத்துக்குடி சத்யசாய் சேவா சமிதி மாவட்ட தலைவர் செந்தில் கலந்து கொண்டு ஆன்மீகம் பற்றி பேசினார். பக்தர்களுக்கு மூன்றுவகையான பிரசாதங்களும், மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு பூஜைகளை சாயிபாபா கோயில் குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்தார். விழாவில் தூத்துக்குடி சத்யசாய் சேவா சமிதி கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், கோவில்பட்டி கன்வீனர் ராமகிருஷ்ணன், ஷீரடி டிரஸ்ட் நிர்வாகக்குழு உறுப்பினர் உக்கிரமபாண்டியன் உட்பட கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களிலிருந்து பல அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.