சிதம்பரத்தை நடராஜர் கோயில் என்று குறிப்பிட்டாலும், இங்குள்ள மூலவர், லிங்க வடிவில் ’ஆதிமூலநாதர்’ என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். கைலாயநாதரான சிவனின் நாட்டியத்தை, பூலோக மக்களும் தரிசிக்க விரும்பிய பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள், தில்லைவனமான இத்தலத்தில் ஆதிமூலநாதரை நோக்கி தவமிருந்தனர். வேண்டுதலை ஏற்ற சிவன், தைப்பூச நன்னாளில் உச்சிப் பொழுதில் ’திரிசகஸ்ர முனிவர்கள்’ என்னும் 3000 அந்தணர்களுடன் எழுந்தருளி நடன தரிசனம் அளித்தார். நான் அசைந்தால்; அசையும் அகிலமெல்லாமேஉலக இயக்கத்தின் உயிர்த்துடிப்பாக இருப்பவர் சிவன். சதா சர்வ காலம் இடை விடாமல் ஆடிக் கொண்டே உலகத்தை இயக்குகிறார். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழில்களை நடனத்தின்போது நடத்துகிறார். இதனை ’பஞ்ச கிருத்தியம்’ என்பர். நடராஜர் அசைந்தாடுவதால் தான் அணு முதல் ஆகாயம் வரை அனைத்தும் அசைந்து இயங்குகிறது.