பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
அவிநாசி :“வேதம் எனும் சமுத்திரத்தை கடந்த அனுமனின் தெய்வீக சக்தி, ஏழரை சனி, அஷ்டம சனி பாதிப்புகளையும் அடக்கி ஒடுக்கிவிடும்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார். அவிநாசி, ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில் நடந்து வரும், கம்பராமாயண தொடர் சொற்பொழிவில், ‘அஞ்சன வண்ணனும், அஞ்சனை மைந்தனும்’ என்ற தலைப்பில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ராமனும், லட்சுமணனும் காட்டின் வழியே வந்து கொண்டிருந்த போது, அனுமன் மறைந்திருந்து, பார்க்கிறார். மனைவியின் பெருமை குறித்து பிரம்மச்சாரியான அனுமனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால், ‘அடடே, ஏதோ மயக்கம் கொடுக்கும் பொருளை தொலைத்து விட்டது போல் வருத்தமாக வருகின்றனரே,’ என்று அனுமன் நினைத்துள்ளார்.
வாலியுடன் சண்டையிட்டு வெற்றி பெற, அனுமன் உதவும் ஆளாக இருப்பானா? என, சுக்ரீவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போதுதான், ராமர் அனுமனை பார்த்து, ‘உனக்கு கல்வியை விட தன்னடக்கம் அதிகம் இருக்கிறது. கற்பது மட்டுமல்ல, கற்றபின் தன்னடக்கமாக இருப்பதும் வெற்றிக்கான பாதையை காட்டும். வேதம் என்ற சமுத்திரத்தை கடக்க ஒருவன் உண்டு என்றால், அது அனுமன் மட்டும் தான் என்று, பாராட்டுகிறார். ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு தொண்டு செய்து மகிழ்ந்த அனுமனுக்கு, அபார சக்திகளும் அடங்கியுள்ளன. ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற பாதிப்புகளையும், அனுமனின் தெய்வீக சக்தி அடக்கி ஒடுக்கி விடும். பக்தியுடன், தன்னடக்கமும் இருப்பதால், அனுமனுக்கு அபாரமான தெய்வீக சக்தி உள்ளது என்பதை அறிந்த ராமன், ‘உன்னை காக்கும் கடவுளாக வந்துள்ளான்’ என்று சுக்ரீவனிடம் நெகிழ்ச்சியாக கூறினார்.
அதாவது, துன்பம் வந்த போது யார் உதவி செய்ய வருகிறார்களோ அவர்தான் கடவுள்; உண்மையான பக்தனை காக்க கடவுளே நேரில் வருவார். அடிமையாக இருந்து சேவையாற்றுவதைவிட, தொண்டு செய்வதே சிறப்பானது. அதாவது, மற்றவரை அண்டியிருந்து பிழைத்து சேவை செய்வதை அடிமை சேவை என்கின்றனர். அனுமன் வந்த பிறகே, ராமாயணம் சிறப்பு பெற்றது. அவதார புருஷனான ராமன் நல்லவன்; அவனுக்கு தொண்டு சேர்ந்த அனுமன் வல்லவன். நல்லவனுடன், வல்லவன் சேர்ந்த பிறகே ராமாயணம் முழு பூரணத்துவம் பெற்றது. இவ்வாறு, அவர் பேசினார்.