சபரிமலை புண்ணியம் பூங்காவனம் திட்டத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 02:01
சபரிமலை: சபரிமலையில் சுகாதாரத்தை பாதுகாக்க பக்தர்கள் ஒத்துழைப்புடன் கேரள போலீஸ் நடத்தி வரும் ’புண்ணியம் பூங்காவனம்’ திட்டத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சபரிமலை கோயிலில் மலைபோல் குவிந்து வந்த பாலிதீன் குப்பை, பாட்டில் குடிநீர் தடையால் தற்போது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குவியும் குப்பையை அகற்ற 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பக்தர்ளையும் ஈடுபடுத்தினால்தான் இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் புண்ணியம் பூங்காவனம் திட்டம்.தினமும் காலை ஒரு மணி நேரம் சபரிமலையில் பணிபுரியும் ஊழியர்களும், பக்தர்களும் துப்புரவு பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் அடிப்படை. வணங்குகின்ற கைகளை விட, சேவை செய்யும் கைகளைதான் ஐயப்பன் விரும்புகிறார் என்று சன்னிதானத்தில் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்யப்படுகிறது.தற்போதைய கேரள மத்திய மண்டல ஐஜி விஜயன், சபரிமலையில் போலீஸ் தனி அதிகாரியாக பணியாற்றிய போது இந்த திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டம் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில், மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, சபரிமலையில் இந்த பணியை பாராட்டி பேசினார். பக்தர்கள் அதிகமாக கூடும் புண்ணிய தலத்தில் குப்பைகளை எதிர் கொள்வது சவாலான விஷயம், அதை எதிர்கொண்டு சபரிமலை வெற்றி பெற்றுள்ளது. இந்த துப்புரவு வேள்வியில் பங்கு கொள்ளாமல் இருந்தால் சபரிமலை பயணம் முழுமை அடையாது என்ற எண்ணத்தை இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ளது. இறைவனை வணங்குவதில் துாய்மை வேண்டும் என்பதை பக்தர்கள் மத்தியில் இந்த திட்டம் உணர்த்தியுள்ளது.இவ்வாறு பிரதமர் பாராட்டியுள்ளார்.