பதிவு செய்த நாள்
02
ஜன
2018
02:01
பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், கவுண்டம்பாளையம், சூலுார், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆங்கில புத்தாண்டையொட்டி, கோவில்கள், சர்ச்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மத்தம்பாளையம் காரணவிநாயகர் கோவிலில் அதிகாலை, சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவில், பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம் செய்யப்பட்டது.பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
துடியலுார் விருந்தீஸ்வரர் கோவிலில், அதிகாலையில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி கும்பிட்டனர். இடிகரை வில்லீஸ்வரர் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில், பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில், பாலாஜி நகர் செல்வவிநாயகர் கோவில், மாரியம்மன் கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சூலுார்: சூலுார் வைத்தியநாதசுவாமி கோவில், திருவேங்கடநாத பெருமாள் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், செஞ்சேரி மலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் மற்றும் இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன்தினம் இரவு, சூலுார் சி.எஸ்.ஐ., சர்ச், மார்க்கெட் ரோடு சர்ச், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி பகுதி சர்ச்களில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
காரமடை, மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை, கோவில் நடை திறந்து, மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் பூஜை செய்யப்பட்டது. காரமடை லோகநாயகி அம்பாள் சமேத நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிேஷக பூஜைகள் நடந்தன.மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு நற்கருணை ஆசிர்வாதமும், திருப்பலியும் நடந்தது. காரமடை அற்புத கெபி ஆரோக்கிய அன்னை சர்ச்சில், புத்தாண்டு திருப்பலி பங்கு பாதிரியார் ேஷக்கப் தலைமையில் நடந்தது. மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., துாய யோவான் சர்ச்சில், புத்தாண்டு வழிபாடு நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு துவங்கியது. ஆயர் கிறிஸ்டோபர், உலக சமாதானம், அமைதியை வலியுறுத்தினார்.
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவிலில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு பள்ளியறை பூஜை நடந்தது. பின்னர் அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. திருவாதிரை என்பதால், நடராஜருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மன்னீஸ்வரருக்கும், அருந்தவச்செல்வி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. திருப்பாவை பாசுரம் வாசிக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் - சத்தி ரோட்டிலுள்ள, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச்சில், நேற்று முன் தினம் நள்ளிரவு பிரார்த்தனை நடந்தது. ஆயர் சேகர் புத்தாண்டு சிறப்பு செய்தி வாசித்தார்.-நமது நிருபர் குழு-