பதிவு செய்த நாள்
02
ஜன
2018
02:01
கீழக்கரை : கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு, பரதர் தெரு புனித அந்தோணியார் சர்ச், பண்ணாட்டார் தெரு அந்தோணியார் சர்ச், சி.எஸ்.ஐ., துாய பேதுரு சர்ச்,முத்துப்பேட்டை சர்ச், மூக்கையூர் புனித யாகப்பர் சர்ச், மேலக்கிடாரம் மடத்தாகுளம் சி.எஸ்.ஐ.,சர்ச்,கடலாடி புனித அந்தோணியார் சர்ச்,சவேரியார் பட்டினம் புனித சவேரியார் சர்ச்,சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி சர்ச் ஆகிய இடங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
* கீழக்கரை தட்டார்தெரு,உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளுக்கு பின் சர்வ ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள், சர்ச்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராமநாதபுரம் பகுதியில் காட்டுப்பிள்ளையார் கோயில் தெரு மாரியம்மன் கோயில், பாலசுப்பிரமணியசுவாமி கோயில், சடச்சி முத்துமாரியம்மன் கோயில், மந்தை மாரியம்மன் கோயில், ஒற்றைப்பனை மாரியம்மன் கோயில், ரகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில், காட்டுப்பிள்ளையார் கோயில் தர்ம சாஸ்தா கோயில், திரவுபதியம்மன், வழிவிடும் முருகன் கோயில், உள்ளிட்ட கோயில்களில் நள்ளிரவு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுவாமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய சுவாமி தரிசனம் செய்தனர். கிறிஸ்தவ ரோமன் சர்ச், புனித அந்தோணியார் ஆலயம், உள்ளிட்ட சர்ச்சுகளில் நள்ளிரவு நடந்த சிறப்பு பிரார்த்தனை, திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது.. முன்னதாக மூலவருக்கு பால், சந்தன, குங்கும அர்ச்சனை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜையில் உப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றன.
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள்,தொண்டி சிவன் கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், பன்னீர்,பஞ்சாமிர்த அபிேஷகங்கள் நடந்தன.
ராமேஸ்வரம்:புத்தாண்டு தினமான நேற்று, ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித சூசையப்பர் சர்ச், தங்கச்சிமடம் சந்தியாகப்பர் சர்ச், குழந்தை ஏசு சர்ச், பாம்பன் மாதா சர்ச்சில் நடந்த புத்தாண்டு சிறப்பு திருப்பலி பூஜையில் ஏராளமான மக்கள் பங்கேற்று அருளாசி பெற்றனர்.