பதிவு செய்த நாள்
04
ஜன
2018
12:01
மண்ட்லா: மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கண்ட்வா மாவட்டம், ஓம்காரேஷ்வரில், நர்மதை ஆற்றங்கரையில், ஆதி சங்கரருக்கு, 108 அடி உயர சிலை அமைக்கும் பணி, கடந்த ஆண்டு ஜனவரியில் துவங்கியது. மாநிலம் முழுவதும், ஆதி சங்கரர் சிலை வடிவமைப்பதற்கு தேவையான உலோகங்கள் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த யாத்திரை மூலம், இந்த பிரசாரத்தில் மக்கள் இணைக்கப்படுகின்றனர்.இந்த பிரசார யாத்திரையில், ஆதி சங்கரரின் பாதுகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. சமீபத்தில், டிண்டோரி மாவட்டத்தில் இருந்து, மண்ட்லா மாவட்டத்திற்கு வந்த பாதுகை அடங்கிய பெட்டிக்கு, மண்ட்லா கலெக்டர், சூபியா பாரூக்கி, பூஜை செய்து வரவேற்றார். பின், பாதுகை உள்ள பெட்டியை, தன் தலையில் வைத்து, ஊர்வலமாக எடுத்து வந்தார்.பாதுகையை தலையில் எடுத்து வரும் கலெக்டரின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. கலெக்டரை, பொது மக்கள் பாராட்டிஉள்ளனர்.
கேரள மாநிலம், காலடியில் பிறந்த, ஆதி சங்கரர், ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று தான் என்ற அத்வைத தத்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். நாடு முழுவதும் அத்வைத தத்துவத்தை பரப்புவதற்காக, கர்நாடக மாநிலம், சிருங்கேரியில் சாரதா பீடம், குஜராத் மாநிலம், துவாரகையில், துவாரகா பீடம், உத்தரகண்ட் மாநிலத்தில், ஜோஷி மடம், ஒடிசா மாநிலம் புரியில், கோவர்த்தன பீடம் என, நான்கு திசைகளில் மடங்களை நிறுவினார். தமிழகத்தில், காஞ்சிபுரத்தில், சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.