பதிவு செய்த நாள்
04
ஜன
2018
12:01
துாத்துக்குடி: இந்திய கலாசாரத்தை அறிய சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் தமிழக உடையணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 32 பேர்,இந்தியாவின் கலாசாரத்தை அறிந்துகொள்வதற்காக சுற்றுலா வந்துள்ளனர். கடந்த மாதம் 28 ம் தேதி சென்னை வந்த குழுவினர், புதுச்சேரி, தஞ்சாவூர்,மதுரை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று துாத்துக்குடி வந்தனர். துாத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில், தமிழர் திருநாளான பொங்கலை, அவர்களுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. வெளிநாட்டினர் அனைவரும் கதர் வேட்டி, கதர் சேலை அணிந்து பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கும் போது பொங்கலோ பொங்கலோ என குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இன்று (4ம் தேதி) நெல்லையிலும், 5ம் தேதி கன்னியாகுமரியையும், 6ம் தேதி திருவனந்தபுரத்திலும் சுற்றுலாவை நிறைவு செய்கின்றனர்.