பதிவு செய்த நாள்
04
ஜன
2018
12:01
புதுக்கோட்டை: மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் காட்டுபாவா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து, மதுரை செல்லும் வழியில், உள்ள காட்டுபாவா பள்ளிவாசலில், கி.பி., 17ம் நுாற்றாண்டில், அரேபிய நாட்டைச் சேர்ந்த சையதுபக்ருதீன் அவ்லியா எனும் மகான், திருமயத்துக்கு அருகிலுள்ள காட்டில் தங்கியிருந்தார்.இவர் நாகூர் தர்காவில் அடக்கமாயிருக்கும் ஷாகுல்அமீது அவ்லியாவின் பேரன். அப்போது, காட்டு வழியே குழந்தைகளுடன் சென்ற பிராமணப் பெண்களை, 14 கள்வர்கள் வழிமறித்தனர்.அவர்களுடன் சண்டையிட்டு, பெண்களையும், குழந்தைகளையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் சில காலம் வாழ்ந்த பாவா மரணமடைந்தார். பாவா அடக்கமான இடத்தில், அப்பகுதி மக்களால் பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகளுக்கு ஆற்காடு நவாப் முகமது அலியும், அவரது பரம்பரையினரும் கொடையளித்தனர்.புதுகை தொண்டைமான் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும், இந்த தர்காவுக்கு நிதியுதவி செய்தனர். 1696ல் கிழவன் சேதுபதி காலத்தில், இந்த தர்காவுக்கு கொடை வழங்கிய செய்தி, இங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, திகழும் இப்பள்ளிவாசலில், ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடு விழா இஸ்லாமியர்கள், இந்துக்கள் இணைந்து வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.இதில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சந்தனக்கூடு விழா, கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, 15 நாட்கள் தினமும் சிறப்பு தொழுகை நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தனக்கூடு ஊர்வலம், வாண வேடிக்கைகளுடன் நடந்தது. இதில், அனைத்து தரப்பு பொதுமக்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.