பதிவு செய்த நாள்
06
ஜன
2018
11:01
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள உற்சவர் சிலைகளில், தங்கமே சேர்க்கப்படாத நிலையில், தங்கம் எப்படி காணாமல் போகும் என, அறநிலையத்துறை கேள்வி எழுப்பி உள்ளது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள பழைய உற்சவர் சிலை, பல நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அது, சிதிலமடைந்ததால், 2016ல், புதிய சிலை செய்யப்பட்டது. இந்த இரு சிலைகளிலும் உள்ள தங்கம் மாயாமாகி உள்ளதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அறநிலையத்துறை திருப்பணிகள் கூடுதல் கமிஷனர், கவிதா கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள, சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை, 2009க்கு முன் சிதலமடைந்து விட்டது. மூன்று முறைக்கு மேல் புனரமைக்கப்பட்டது. எனவே, பக்தர் ஒருவர் உற்சவர் சிலை செய்து கொடுத்தார். ஆனால், அந்த சிலையில் பித்தளை அதிகம் சேர்க்கப்பட்டதால், களை இழந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, புதிய உற்சவர் சிலை செய்ய, அப்போதைய கமிஷனர் உத்தரவிட்டார். அறநிலைய துறையில், சிலைகள் செய்யும் போது, தங்கம் சேர்ப்பது, 2009ல், தடை செய்யப்பட்டு விட்டது. எனவே, புதியதாக செய்த உற்சவர் சிலைகளில் தங்கம் சேர்க்கப்படவில்லை. சிலையில் தங்கம் சேர்க்கப்பட்டதாக, அறநிலையத்துறை கணக்கு காட்டவில்லை. எந்த உபயதார்களும், சிலை செய்ய தங்கம் கொடுத்தோம் என, புகார் செய்யவில்லை. போலீஸ் விசாரணையும் முழுமையாக முடியாத நிலையில், அறநிலையத்துறை மீது களங்கம் ஏற்படுத்த, தங்கம் மாயமாகிவிட்டதாக புகார் கூறப்படுகிறது; இதில், உண்மை இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தங்கம் கலப்பது எவ்வளவு? : பஞ்சலோக சிலை செய்ய, செம்பு, 80; பித்தளை, 12; வெள்ளீயம், 2; வெள்ளி, 2; தங்கம், 5 சதவீதம் என்ற, விகிதாச்சாரத்தில் சேர்ப்பது வழக்கம். ஆனாலும், சிலைகள் செய்யும் போது, அப்படியே தங்கம் சேர்ப்பது கிடையாது. பணிகள் முடியும் தருவாயில், அதிக வெப்பத்தில் உள்ள சிலைகள் மீது, தேவையான தங்கம் ஊதப்படுகிறது. பல நுாறு ஆண்டுகள் அபிஷேகம் செய்தாலும், தங்கம் அப்படியே இருக்கும். ஆனால், சோமாஸ்கந்தர் சிலையில், தங்கம் மாயமானதாக கூறும் புகாரில், சிலை செய்வதற்கான உலோக விகிதாச்சாரத்தை அடிப்படையாக வைத்து, சிலைகளின் மொத்த எடையில், 5 சதவீதம் தங்கம் என, கணக்கிட்டு, 5.45 கிலோ தங்கம் மாயமாகி விட்டதாக, புகார் கூறப்படுகிறது என, அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறின.