பதிவு செய்த நாள்
08
ஜன
2018
12:01
தஞ்சாவூர்:திருவையாறு, தியாகராஜ சுவாமிகளின், 171வது ஆராதனை விழாவை முன்னிட்டு, நேற்று பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியில், கலைஞர்கள் திரளாக பங்கேற்று, தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள சத்குரு தியாகராஜர் நினைவிடத்தில், ஆண்டுதோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. 171வது ஆண்டு ஆராதனை விழா, கடந்த, 2ம் தேதி மாலை துவங்கியது.அன்று முதல் தினமும் இன்னிசை கச்சேரி, வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.நேற்று காலை, திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை பாடி தெற்கு வீதி, கும்பகோணம் சாலை வழியாக தியாகராஜர் நினைவிடம் அமைந்துள்ள பந்தலுக்கு வந்தனர். தியாராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மங்கள இசையை தொடர்ந்து, 9:00 மணிக்கு தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், சீர்காழி சிவசிதம்பரம், சுதா ரகுநாதன், மஹதி உள்ளிட்ட கர்நாடக இசை கலைஞர்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கர்நாடக இசை கலைஞர்கள் பங்கேற்றனர்.பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்ற தும், நாதஸ்வர கச்சேரி, உபன்யாசம் நடந்தது.