சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிறைவை முன்னிட்டு மூன்று ராஜாக்கள் பொங்கல் வைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் விழா துவங்கி 11 வது நாளான நேற்று முன்தினம் இரவு கொசவபட்டி புனித உத்திரியமாதா ஆலயத்தில் நிறைவு விழா நடந்தது. குழந்தை ஏசுவை காணிக்கை பொருட்களுடன் பார்க்க சென்றதாக கூறப்படும் கஸ்பார், மெல்கியூர், பல்தசார் ஆகிய மூவரை போற்றும் விதமாக உத்திரிய மாதா ஆலயம் முன்பு 3 பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கலை படையலிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. குடில்கள் அமைத்திருந்தவர்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்த பிறகு குடில்களை கலைத்தனர். ஆலயம் முன் வைக்கப்பட்ட பொங்கலை உருண்டைகளாக பிடித்து, நேற்ற காலை அனைத்து தலைக்கட்டு தாரர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு மரியாதை செய்து பொங்கல் உருண்டை வழங்கப்பட்டது. இந்த வழக்கம் கடந்த இருநுாறு வருடங்களுக்கு மேல் கொசவபட்டியில் பின்பற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.