பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
தர்மபுரி: தை அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர்.
தை அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவிலில், நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை, 11:00 மணிக்கு, ஊற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கஜ வாகனத்தில் அமர்த்தி, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இது, வெளிப்பேட்டைதெரு, ஹரிஹரநாத சுவாமி கோவில்தெரு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் கோவில், கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், பழைய மிட்டாரெட்டி அள்ளி முத்துமாரியம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில், நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தை அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நேற்று காலை முதல் ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால், ஒகேனக்கல், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. மேலும், பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.