பதிவு செய்த நாள்
19
ஜன
2018
11:01
பழநி: பழநி முருகன் கோவிலில், தைப்பூச விழா, ஜன., 25 - பிப்., 3 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, சென்னை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்ட பாத யாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துஉள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் புகார் தெரிவிக்க, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, கோவில் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ளது. இதில், 04545 - -240293; 241293 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது போக, 1800 425 9925 என்ற கட்டணமில்லா எண்ணில், காலை, 9:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இது குறித்து, பழநி கோவில் இணை கமிஷனர், செல்வராஜ் கூறியதாவது: பழநியில், இந்தாண்டு முதன்முறையாக, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. 31ல், தைப்பூசம் அன்று மாலை, சந்திர கிரகணம் என்பதால், காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மதியம், 3:30 மணிக்கு, மேல் கோவில் நடை சாத்தப்படும். அனைத்து இடங்களிலும் நிழற்பந்தல் மற்றும் குடிநீர், மின் விளக்குகள், தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்துள்ளோம். இடும்பன்குளம், சண்முகநதியில், ’ஷவர்’ அமைக்கப்பட்டு உள்ளது. கிரிவீதியில், பக்தர்கள் தங்கும் மண்டபம் காத்திருப்பு கூடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.