பதிவு செய்த நாள்
22
ஜன
2018
02:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலுக்காக, 1,000 ஆண்டுகளுக்கு முன், வெட்டப்பட்ட கிணறை, பக்தர்கள் பார்த்து வியந்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல, 1,320 படிக்கட்டு, 4 கி.மீ., தூரத்துக்கு, மலைப்பாதை உள்ளது. இரு வழிகளும், 50 ஆண்டுகளுக்குள்தான் அமைக்கப்பட்டது. அதற்கு முன், 1,000 ஆண்டுகளாக, சென்னிமலையின் தெற்கு பகுதியில், பாதை இருந்தது. அதன் வழியாகத்தான் கோவிலுக்கு போக்குவரத்து நடந்தது என்றும், பலர் கூறுவதுண்டு. அந்த பாதை இன்றும் உள்ளது. சென்னிமலை அருகே நல்லபாளியில் இருந்து, வடக்கே வனப்பகுதிக்குள், அந்தப்பாதை தொடங்குகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் வழியில், வித்தியாசமான வடிவத்தில் ஒரு கிணறு உள்ளது. ஆங்கில எழுத்தான ‘எல்‘ வடிவத்தில் வெட்டப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சிவாலய சோழன் என்ற மன்னன், பல்வேறு ஊர்களில் கோவில்களை கட்டிவிட்டு, சென்னிமலை முருகனுக்கும் கோவில் கட்ட விரும்பினான். இதன் தண்ணீர் தேவைக்காக, வெட்டப்பட்ட கிணறுதான் இது. அதுவும், ஒரே நாளில் வெட்டப்பட்டுள்ளது என்றும், தகவல் உள்ளதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னிமலை தன்னாசியப்பன் கோவில் பரம்பரை பூசாரிகளில் ஒருவர் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஆயிரக்ககணக்கான ஆட்களுடன், ஒரே நாளில் கிணறு வெட்டப்பட்டதாக வரலாறு உள்ளது. அதிலிருந்து தண்ணீர், கல், மணல் ஆகியவற்றை யானை, குதிரை மற்றும் மனிதர்கள் உதவியுடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கர்ப்பக்கிரகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு செல்லவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும், கற்களை பதித்து பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அந்த பாதை, 1 கி.மீ., தூரத்துக்கு அழியாமல் உள்ளது. இதன் வழியாக சென்றால், வடக்கு பார்த்த விநாயகர் கோவில் உள்ளது. இங்கு பூஜை செய்து விட்டுத்தான் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதேபோல் அய்யம்பாளைம் அங்காளம்மன் கோவில் அருகில் கிழக்கு பார்த்த விநாயகர், தோப்புப்பாளையம்-தொட்டம்பட்டி இடையே தெற்கு பார்த்த விநாயகர், சென்னிமலை கிழக்கு ராஜ வீதி தேர் நிலை அருகே மேற்கு பார்த்த விநாயகர் என, நான்கு திசைகளிலும் குடிகொண்டு, முருகனுக்கு பக்க பலமாக விநாயகர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.