பதிவு செய்த நாள்
24
ஜன
2018
04:01
பழநி, பழநி முருன்கோயில் கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கவும், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களை தடுக்கும்விதமாகவும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. முருகப் பெருமானின் மூன்றாம் படைவீடான பழநி மலைக்கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்காரணமாக மலைக்கோயில் பாதவிநாயகர்கோயில், வடக்குகிரிவீதி, வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கிரிவீதியின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கிரிவீதியில் பாதுகாப்பு: மதுரை மீனாட்சியம்மன்கோயில் சித்திரைவீதி போல, பழநிகிரி வீதியை சுத்தமானதாக பராமரித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் கொண்டுவரஇவ்வாண்டு பழநிகோயில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி மலைக்கோயில் கிரிவீதியில் நுழைவுப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார், கோயில் செக்யூரிட்டிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்தொடர்ச்சியாக கிரிவீதிகள் முழுவதும் 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும்பணி நடக்கிறது. இதுகுறித்து இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொடர்ந்து போலீசார், செக்யூரிட்டிகள் மூலம் கண்காணிக்கிறோம். விழாக்காலங்களில் கிரிவீதியில் தற்காலிமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இவ்வாண்டு கிரிவீதிகள் பக்தர்கள் தங்கும் கூடம் உள்ளிட்ட இடங்களில் நிரந்தரமாக கேமராக்கள் பொருத்துகிறோம். இதன்மூலம் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் அறையில் இருந்தே கூட்டநெரிசல் உள்ளிட்டவைகளை கண்டறிந்து சரிசெய்யப்படும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக கட்டுப்படுத்தியுள்ளோம் என்றார்.