பதிவு செய்த நாள்
27
ஜன
2018
12:01
கோவை, நல்லது செய்தால், இறைவன் அருள் பெறலாம், என, கோவையில், மாதா அமிர்தானந்தமயி அருளுரை வழங்கினார். கோவை, நல்லாம்பாளையம், அமிர்தா வித்யாலயா மெட்ரிக்., பள்ளி வளாகத்தில், இரு நாட்கள் மஹோற்சவ விழா, நேற்று துவங்கியது. இதில், மாதா அமிர்தானந்தமயி பேசியதாவது:மனிதர்களிடம் அன்பு குறைந்து வருகிறது. பலரின் சொற்களிலும், செயல்களிலும் கசப்பு தென்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், மொபைல் போன்கள், தொலைக்காட்சி போன்றவற்றால், மனிதர்களின் வாழ்க்கை சுருங்கி விட்டது.
உலக சந்தையில், மதுவுக்கு தான் அதிக தேவையுள்ளது.மதுவால், ஏராளமான துன்பத்தை மக்கள் அனுபவிக்கின்றனர். குடும்பத்தின் அமைதி கெட்டு விடுகிறது. ஆன்மிகத்தை கடைபிடித்தால், தீய பழக்கங்கள் வராது. ஆன்மிகம், மூடநம்பிக்கை அல்ல; சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கையை அகற்ற, ஆன்மிகம் உதவுகிறது.மனிதனின் மனம், எண்ணம் அனைத்தும், பணத்தை சுற்றியே உள்ளது. சுயநலத்தோடு வாழ்க்கை நடத்துகின்றனர். மனக் கட்டுப்பாடு இல்லா விட்டால், வாழ்க்கை மோசமாகி விடும். வாழ்க்கையில் விழிப்புணர்வு இல்லாததால், தகாத செயல்களை மேற்கொள்கிறோம்; அதனால், துன்பத்தை அனுபவிக்கிறோம். நம் செய்யும் வினை தான், வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆணவத்துடன் இருந்தால், தீமை வந்து சேரும். வாழ்க்கையில், நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பலருக்கு இருப்பதில்லை. இறைவன் விதிமுறைகளை யாராலும் மீற முடியாது; நாம் செய்யும் செயல்களின் பலன்களை, என்றாவது அனுபவிக்க வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை மறந்து, நிகழ்காலத்தில் நல்லது செய்தால், இறைவன் அருள் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.