சிதம்பரம்: இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, நடராஜர் சன்னிதி சித்சபையில் தேசியக்கொடியை வெள்ளித் தட்டில் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின், வெள்ளித்தட்டில் தேசியக்கொடியை வைத்து, மேளதாளங்கள் முழங்க, கிழக்கு கோபுரத்திற்கு பொது தீட்சிதர்கள் எடுத்து சென்றனர். காலை 8:00 மணிக்கு, கோபுரத்தின் உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 1950ம் ஆண்டில் இருந்து, நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.