பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
காஞ்சிபுரம்: சமூக வலைதளங்களில் பரவிய தகவலையடுத்து, பிரதோஷ தினமான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காஞ்சிபுரத்தில், கடந்த சில தினங்களாக, ஜன., 29ல் நடைபெறும், பிரதோஷம் குறித்து, ’வாட்ஸ் ஆப், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில், சிவனுக்கு உகந்த நாள், நட்சத்திரம், திதி என, மூன்றும் ஒன்றாக வரும், அபூர்வ அமைப்பு கொண்டதாக, நேற்றைய பிரதோஷம் அமைந்திருந்தது. இது, 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வமான பிரதோஷமாகும். இந்நாளில், வழிபாடு செய்தால், 108 பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும். சந்தனம், பால், இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து, வில்வ மாலை அணிவித்து வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவலையடுத்து பிரதோஷ தினமான நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் உள்ள, பிரபல பெரிய கோவில் மட்டுமல்லாமல், சிறிய கோவில்களிலும் பக்தர்கள் அலைகூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில், ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைவதற்கு கூட இடமில்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதுபோல, நகரில் உள்ள, ஏகாம்பரநாதர், கச்சபேஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், மணிகண்டீஸ்வரர் என, அனைத்து கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.