“அப்பன் இரந்துண்ணி; ஆத்தாள் மலைநீலிஒப்பறிய மாமன் உறிதிருடி- சப்பைக்கால்அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கு இங்குஎண்ணுங்கால் பெருமை இவை” என, முருகனைப் பற்றி ஒரு பாடல் இருக்கிறது. இதைப் பாடியவர் காளமேகப் புலவர்.தந்தையாகிய சிவன், பிச்சையேற்று பிழைப்பவர். அன்னை பார்வதியோ மலையில் பிறந்த கோபக்காரி. ஒப்பில்லாத மாமன் திருமால், உறியில் வெண்ணெய் திருடுபவர். சப்பைக் கால் கொண்ட அண்ணன் விநாயகர் பெருவயிறு கொண்டவர். இவர்களே ஆறுமுகனின் பெருமை மிக்க உறவினர்கள்.கேலி செய்வது போல தெரிந்தாலும், ஆழ்ந்து படித்தால் இதன் உண்மையான பொருள் புரியும். பக்தர்களிடம் உள்ள தீய குணங்களை சிவன், தன் திருவோட்டில் பிச்சையாக ஏற்கிறார். தீமையை எதிர்க்கும் போது, பார்வதி கொடிய நீலியாக கோபம் கொள்கிறாள். வெண்ணெய் திருடுவது போல, நல்லவர் உள்ளத்தை கொள்ளை கொள்பவராக திருமால் இருக்கிறார். அண்டங்களை வயிற்றில் தாங்கி நிற்பதால், விநாயகர் பெருவயிறு கொண்டவராக விளங்குகிறார். வஞ்சப் புகழ்ச்சி அணியில் அமைந்த பாடல் இது.