பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, குண்டம் திருவிழா கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு, 9:00 மணிக்கு சித்தரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கோவில் அருளாளி, மல்லிகை பூ உருண்டை, எலுமிச்சை உருட்டி, குண்டம் இறங்குவதை துவக்கினார். அருளாளிகளை தொடர்ந்து, முறைதாரர்கள் மற்றும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, நாளை காலை, 11:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.