சீர்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2018 10:02
மயிலாடுதுறை: சீர்காழியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகை மாவட்டத்தில் சீர்காழியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு காளிபுரம் என்ற ஒரு புராணப் பெயரும் உள்ளது. இதனால் சீர் காழியில் திரும்பும் திசை எங்கும் ஏராளமான காளியம்மன் கோயில்கள் அமைந்திருப்பது சிறப்பு. காளியம்மன் கோயில்களில் முதன்மையான பத்ரகாளியம்மன் கோயிலின் ஆ ண்டு திருவிழா தை மாதம் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் வெள்ளிக்கிழமையான நேற்று இரவு தீமிதித்திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைகளை மாரிமுத்து மற்றும் மோகன் பூஜாரிகள் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ததுடன், மாவிளக்கு போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொ டர்ந்து பச்சைக்காளி, பவளக்காளி திருநடனம் நடைபெற்றது. அதனையடுத்து கோயில் முன்பு அம்பாள் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சக்திக் கரகம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்து இரவு 10:30 மணிக்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு, அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் சரவணன் தலைமையிலான நேதாஜி இளைஞர் சங்கத் தினர் செய்திருந்தனர்.