பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
ஓசூர்: ஓசூரில், பூங்கரகம் மற்றும் பல்லக்கு உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர், தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திர சூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழா, அடுத்த மாதம், 1 ல் நடக்கிறது. இதையொட்டி, ஓசூர் நகரில் உள்ள சந்திர சூடேஸ்வரர், தர்மராஜ சுவாமி, கோட்டை மாரியம்மன், பண்டாஞ்சநேயர், விநாயகர், முத்து மாரியம்மன், சின்ன கோட்டை மாரியம்மன், பெரியார் நகர் முருகன் கோவில், மாசாணியம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து, 20க்கும் மேற்பட்ட உற்சவர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப மற்றும் முத்து பல்லக்கில் வலம் வந்தனர்.
இந்த பல்லக்குகள், நேற்று முன்தினம் இரவு முழுவதும் முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக சென்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் இளைஞர்கள் நடனம் ஆடியபடி சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தர்மராஜ சுவாமி பூங்கரகம் நடந்தது. தேர்ப்பேட்டையில் உள்ள தர்மராஜ சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீக்குண்டம் இறங்கிய பின், பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராயக்கோட்டை ரோடு சர்க்கிள், கும்பார தெரு, நெசவாளர் தெரு, திகிலர்பேட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பூங்கரகம் சென்றது. வீடுகள் முன் பூங்கரகத்திற்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர். ஓசூர் பஸ் ஸ்டாண்டில், சந்திரசூடேஸ்வர சுவாமி அன்னதான கமிட்டி சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., கோபிநாத் தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.