பதிவு செய்த நாள்
06
பிப்
2018
02:02
சாயல்குடி: சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சியில், இ.சி.ஆர்., ரோட்டோரம் அமைந்த பாலம்மாள் நகரில் உடைமரத்தின் அடிப்பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் சிவன் கோயில் உள்ளது. மூன்று அடி நீள அகலம் கொண்ட நந்தி சிலை மட்டுமே முக்கால்வாசி பகுதி, மண்ணில் புதைந்த நிலையில் வெளியே தெரிகிறது. பாறைக்கற்களால் வடிவமைக்கப்பட்ட நந்தியின் உருவ அமைப்பு தெளிவாக உள்ளது.
இதன் அருகே 3 பிரிவுகளாக சிவலிங்கத்தின் சிதிலமடைந்த சிலை உள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் சென்றுவிட்டு ராமேஸ்வரம் செல்<லும் வடமாநில சுற்றுலாப்பயணிகள், இக்கோயிலில் வாகனங்களை நிறுத்தி விட்டு வழிபாடு செய்து திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாலம்மாள் நகர் சமூக ஆர்வலர் பலவேசம் ரமேஷ் கூறியதாவது: தூத்துக்குடி செல்லும் இ.சி.ஆர்., ரோட்டோரம் அருகே பழமையான ஆதி ஈஸ்வரன் கோயில் இப்பகுதியில் இருந்துள்ளது. காலப்போக்கில் கோயில் கட்டடங்கள் மண்ணுக்குள் மூழ்கியுள்ளது. கோயில் அமைந்திருந்த இடத்திற்கு முன்பாக 10 மீ., தொலைவிற்குள் தெப்பக்குளம் இருந்துள்ளதாக கிராம முதியோர்கள் கூறியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த நிலையில் கொம்புகளுடன் வெளியே தெரிந்த நந்தியின், சுற்றளவை மறைத்திருந்த மண் அகற்றப்பட்டவாறு உள்ளது.
கடந்த 2002 ல் நரிப்பையூர் ஊராட்சி சார்பில் 10 அடி ஆழத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கான கட்டுமானப் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்ட போது, மண்ணில் இருந்து முருகன், பத்திரகாளி, பைரவர் ஆகிய தெய்வங்களின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட கடலாடி வருவாய்த்துறையினர் சிலைகளை கொண்டு சென்றுவிட்டனர். 2017 ஜன., முதல் நந்திக்கு மட்டும் பிரதோஷ வழிபாட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர். இனிவருங்காலங்களில் இந்த இடத்தில் ஆதிஈஸ்வரன் கோயில் எழுப்பிடவும் முடிவு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம், தொல்லியத்துறையினர் இடத்தை ஆய்வு செய்து, மண்ணில் புதைந்த சிவன்கோயிலில் மீட்டெடுக்க வேண்டும். தொன்மையான கோயில்களை நாடுவோருக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஏற்ற இடமாக இப்பகுதி விளங்கி வருகிறது என்றார்.