பதிவு செய்த நாள்
06
பிப்
2018
02:02
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே வேப்பமரத்தில் அருள்பாலிக்கும் முத்தாளம்மனை பல தலைமுறையாக மக்கள் வழிபடுகின்றனர். தெய்வங்கள் மரத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் தான் கோவில்களில் ஸ்தலவிருட்சம், அதாவது, சம்பந்தப்பட்ட கோவில்களுக்குரிய மரங்கள் உள்ளன. மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிபுத்துார் கிராமத்தில், வேப்ப மரத்தில், முத்தாளம்மன் குடிகொண்டு அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது.
பஸ்ஸ்டாப்பிலிருந்து சிறிது, தெற்குநோக்கி சென்றால் போஸ்ட் ஆபீஸ் அருகே பெரிய வேப்பமரம் உள்ளது.இந்த மரத்தை முத்தாளம்மனாக மக்கள் வழிபடுகின்றனர். தரைப்பகுதியில் வேல், ஈட்டி நடப்பட்டுள்ளன. மரத்துக்கு மஞ்சள் துணி சுற்றியுள்ளனர். விளக்கு ஏற்ற சிறிய மேடை உண்டு. இந்த அமைப்பை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கதவும் பொருத்தியுள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல தலைமுறையாக முத்தாளம்மனை வணங்குகிறோம். கிராமத்தின் மையப்பகுதியாக இந்த இடம் உள்ளது. திருவிழா, விசேஷங்கள் மற்றும் அனைத்து நல்ல காரியங்கள் குறித்து இந்த மரத்தின் முன்பு கூட்டமாக மக்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள்.மரத்திலுள்ள முத்தாளம்மன் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடப்பதாக நம்புகிறோம். பூவோடு, மாவிளக்கு, தீர்த்த குடங்களை அம்மன் முன்பு வைத்து பூஜை செய்து பின் ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். ஊருக்கு பொதுவில் உள்ள மாரியம்மன் கோவில் விசேஷங்கள் குறித்தும் இங்கு அமர்ந்து ஆலோசனை செய்வது பாரம்பரியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.மடத்துக்குளம் - கொமரலிங்கம் மெயின் ரோட்டில் கிழக்கு நீலம்பூர் பிரிவு உள்ளது. இந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ., தொலைவு, விளைநிலங்களுக்கு மத்தியிலுள்ள ரோட்டில் சென்றால் இந்த கிராமம் உள்ளது.