மகாலிங்க ஸ்வாமி கோவிலில் ஜன.,1ம் தேதி 27 நட்சத்திர மகாயாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2011 11:12
கும்பகோணம்: திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமிகோவிலில் ஜனவரி 1ம் தேதி 27 நட்சத்திர மகாயாகம் நடக்கிறது.கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பெருநலமாமுலையம்மை உடனாய மகாலிங்கப்பெருமான் கோவில் உள்ளது. இக்கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர மகாயாகம் நடக்கிறது. பிரம்மஹத்தி தோஷம், சித்தபிரம்மை ஆகிய குறைபாடுகளை நீக்கக்கூடிய மகாலிங்கசுவாமிகோவிலில் மட்டுமே ஒரே மண்டபத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் அமைந்துள்ளது சிறப்பு.இந்த மண்டபத்தில் நடுநாயகராக குருதெஷ்ணாமூர்த்தி இருக்க இருபுறமும் வரிசையாக நட்சத்திர லிங்கங்கள் உள்ளன. நட்சத்திர மகாயாகத்திற்கான பிரமாண்டமான யாகசாலை இந்த மண்டபத்தின் அருகிலேயே அமைக்கப்படுகிறது. 27 நட்சத்திர தேவதைகளுக்கும் வேதிகை அமைத்து அவற்றின் முன்னே நட்சத்திர வடிவிலான வேள்வி குண்டங்கள் ஒரே வரிசையில் அமைக்கப்படுகின்றன. அந்தந்த நட்சத்திர ஹோமகுண்டம் எதிரில் அவரவர் அமர்ந்து சங்கல்பம் செய்து யாகத்தை கண்டு தங்கள் நட்சத்திர தேவதையை வேண்டிக்கொண்டு அருள்பெற வகை செய்யப்படுகிறது. யாகம் முடிந்து 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.உலக மக்களின் நன்மைக்காக நடத்தப்படும் நட்சத்திர மகா யாகம் திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் நடக்கிறது. திருவெண்காடு சுவாமிநாதசிவாச்சாரியார், கண்ணப்பா சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் ஸ்தானிகர் தண்டபாணி சிவாச்சாரியார், சந்திரசேகர சிவாச்சாரியாருடன் 60 சிவாச்சாரியார்கள் பங்கேற்கின்றனர்.மகாநட்சத்திர யாக ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் சுவாமிநாதன், சண்முகபாஸ்கரன், பொறியாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகாயாகத்தை ஒருங்கிணைந்து நடத்தும் கோவை கோடி புண்ணிய கைங்கர்ய அறக்கட்டளை எழுத்தாளர் மயன் செய்கின்றனர்.