திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு 16 அடி விஸ்வரூப ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் வடகரையில் பூ மகள், திருமகள் உடனுறை அருள்பாலித்து வரும் அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவிலில் வைராக்கிய 16 விஸ்வரூப ஆஞ்நேயர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். திருமணம் தடை, கல்வி மேம்பாடு, கடன் தொல்லை நீங்குதல் ஆகியவற்றுக்கு பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை முறையிடுவதால், அதற்கான நற்பலன்களை பெற்று வருகின்றனர். ஒவ்வொரு அமாவாசை தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிப்பட்டு வருகின்றனர். நேற்று அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகா சபையின் சார்பில் காலையில் ராமர் கோவிலில் பால் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலையில் வெண்ணை காப்பு அலங்காரத்தில் விஸ்வரூõப ஆஞ்நேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராம்குமார், தக்கார் மதியழகன், கணக்கர் ஐய்யப்பன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். அதிகாலை ஐந்து மணி முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிப்பட்டனர்.