பதிவு செய்த நாள்
07
பிப்
2018
12:02
காஞ்சிபுரம்: மாசி மகம் திருவிழாவில், ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளுவதற்காக அமைக்கப்படும், உற்சவ மண்டப கட்டுமான பணி, நிறைவடையும் தருவாயில் உள்ளது. காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், திம்மராஜம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஆண்டுதோறும் நடக்கும் மாசி மகம் திருவிழாவில், ராமலிங்கேஸ்வரர், இளையனார்வேலுார் முருகன் ஆகிய உற்சவ மூர்த்திகள், பாலாறு ஒட்டி இருக்கும் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளுவர். இதில், இளையனார்வேலுார் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளுவதற்கு, உற்சவ மண்டபம் உள்ளது. ராமலிங்கேஸ்வரருக்கு மண்டபம் இல்லாததால், தற்காலிக மேடை அமைத்து, உற்சவர் அமரவைக்கப்படுகிறார். இந்நிலையில், மார்ச்சில் நடைபெறவிருக்கும், 78வது ஆண்டு மாசி மகம் திருவிழாவிற்கு, ராமேஸ்வரருக்கு உற்சவ மண்டபம் அமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்; மண்டபம் கட்டும் பணியை நிறைவு செய்துள்ளனர். திருவிழாவிற்கு முன்னதாக, வண்ணம் தீட்டும் பணி முடிக்கப்படும் என, கிராமவாசிகள் தெரிவித்தனர். - நமது நிருபர் -