பதிவு செய்த நாள்
07
பிப்
2018
12:02
சென்னை: சாலையைவிட தாழ்வாகவும், மக்கள் வழிபட இடையூறாகவும் இருந்த, சி.ஐ.டி., நகரில் வினாயகர் கோவிலை, பொதுமக்கள், நவீன தொழில்நுட்பத்துடன் இடமாற்றி வைத்துள்ளனர். சென்னை சி.ஐ.டி., நகர், ஸ்ரீராம் பேட்டையில், 75 ஆண்டுகளுக்கு முன், சதுர் பூஜ சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இதுவரை, ஐந்து முறை கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. கோவிலை ஒட்டிய சாலை தொடர்ந்து உயர்த்தப்பட்டதால், சாலையை விட கோவில் தாழ்வானது. இதனால் மழைநீர், அடிக்கடி கோவிலுக்குள் சென்றுவிடுவதால், பக்தர்கள் வழிபட முடியாத நிலை ஏற்பட்டு வந்தது.கோவிலை இடித்து, இதைவிட உயரமாக அடித்தளம் அமைத்து, கோவில் கட்டலாம் என, ஒரு தரப்பினர் முடிவு செய்தனர். ஆனால், 75 ஆண்டு பழமையான கோவிலை இடிக்க, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன், கோவிலை இடிக்காமல், அடித்தளத்தை உயர்த்தி, நகர்த்தி வைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது.