திருக்கனூர் : திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில், வக்ர காளியம்மனுக்கு 1008 பால் குடம் அபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனூர் திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு தலைமை நற்பணி மன்றம் சார்பில் உலக அமைதிக்காக ஆண்டுதோறும் திருவக்கரை வக்ரகாளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று 11ம் ஆண்டாக, வக்ரகாளியம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம் நடந்தது. இதற்காக திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஒரு மாதமாக மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டனர். அவர்கள் நேற்று காலை 8 மணிக்கு திருக்கனூர் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து 1008 பால் குடங்களுடன் புறப்பட்டு புதுக்குப்பம், கொடுக்கூர், சங்கராபரணி ஆற்றின் வழியாக திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு காலை 10 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.