பதிவு செய்த நாள்
26
டிச
2011
11:12
திருநெல்வேலி:நெல்லை டவுன் கல்சுரல் அகடமி சார்பில் மார்கழி பஜனை வழிபாட்டுக்குழுக்களின் மெகா பஜனை சங்கமம் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோயிலில் நடந்தது. இதில் பஜனை குழுக்களை சேர்ந்த குழந்தைகள் உட்பட 1200 பேர் கலந்து கொண்டனர்.நெல்லையில் மார்கழி மாதம் முழுவதும் கோயில்களில் பஜனை வழிபாட்டுக்குழுக்கள் பஜனை வழிபாடு நடத்திவருகின்றனர். இவ்வாறு கோயில்களில் பஜனை செய்யும் பஜனைக் குழுக்களை ஒருங்கிணைத்து பஜனை சங்கமம் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோயிலில் நெல்லை கல்சுரல் அகடமி சார்பில் நேற்று நடந்தது. ஒவ்வொரு கோயில்களிலும் பஜனை பாடும் பஜனை குழுவினர் நெல்லை டவுன் 4 ரதவீதிகளில் பஜனை பாடிக் கொண்டு நெல்லையப்பர் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் காந்திமதி அம்மன் சன்னதியிலும் பஜனை பாடினர். பஜனை குழுக்களில் பங்கேற்ற குழந்தைகள் அம்மன், முருகன், விஸ்வாமித்ரர், கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து ஆர்வமுடன் பங்கேற்றனர்.பஜனை குழுவினருக்கு பரிசுகளை நெல்லை மண்டல தலைவர் மோகன் வழங்கினார். நெல்லை கல்சுரல் அகடமி செயலாளர் காசிவிஸ்வநாதன், துணைத்தலைவர் சொனா வெங்கடாச்சலம், சீனிவாசன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கணேஷ், ஏ.எஸ்.சங்கர், முத்துப்பாண்டி மற்றும் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.காரைக்கால் அம்மையார் பக்த சிவவழிபாட்டுக்குழு, அக்கசாலை விநாயகர் கோயில் வழிபாட்டுக்குழு, நெல்லை திருப்புகழ் சபை, மாதா ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி வழிபாட்டுக்குழு, முப்பிடாதி அம்பாள் வழிபாட்டுக்குழு, இரட்டை விநாயகர் பஜனைக்குழு, பொதிகை தென்றல் தேவாரக்குழு, வலம்புரி அம்மன் வழிபாட்டுக்குழு, கோடீஸ்வரன் நகர் வழிபாட்டுக்குழு, செண்பக விநாயகர் வழிபாட்டுக்குழு, அருட்ஜோதி விநாயகர் பஜனைக்குழு உட்பட பல்வேறு பஜனைக்குழுக்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.