பதிவு செய்த நாள்
08
பிப்
2018
12:02
ஈரோடு: பறவை காவடி அலகு குத்தி, அந்தரத்தில் பறந்து வந்த பக்தர்கள், மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு சின்னசேமூர் விநாயகர், மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. கோவிலுக்கு பாத்தியப்பட்ட, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையடுத்து, அலகு குத்தும் விழா நடந்தது. கனிராவுத்தர் குளம் அருகே, அதற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், வேண்டுதல் வைத்து காப்பு கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள், வேல் அலகு, மயில்அலகு, காவடி அலகு, பறவைகாவடி அலகு என, பல்வேறு விதமான அலகுகளை குத்தியபடி நடந்தும், கிரேன் வாகனத்தின் மீது அந்தரத்தில் பறந்தபடியும் வந்தனர். சில பக்தர்கள் தொழில் விருத்தியடைய, ஆட்டோ ரிக்?ஷா, பத்ரகாளியம்மன் சப்பரத்தை முதுகு அலகு குத்தி இழுத்து வந்தனர். பக்தி பரவசத்தில், வழி நெடுகிலும் நின்று கொண்டிருந்த பக்தர்கள், அலகு குத்தி வரும் பக்தர்களின் பாதம் நோகாமால் இருக்க, மஞ்சள் கலந்த நீரை ஊற்றினர்.