பதிவு செய்த நாள்
09
பிப்
2018
02:02
தினமலர் செய்தி எதிரொலி காரணமாக, இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தை துாய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள இரும்பை கிராமத்தில் பிரசித்திபெற்ற மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெறும் நாட்களில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்களின் இரு சக்கர வாகனங்கள், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்கு, கோவில் வளாகத்தில் இடவசதி இருந்தும், செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால், சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு பக்தர்கள் அவதியடைந்தனர். இதனை சுட்டிக்காட்டி தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. அதை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், நேற்று காலை பொக்லைன் மூலம் கோவில் வளாகத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளை அகற்றி, வாகனங்கள் நிறுத்த ஏதுவாக சமன் செய்தனர்.