பதிவு செய்த நாள்
13
பிப்
2018
01:02
வேளச்சேரி, தண்டீஸ்வரர் கோவிலில், பல ஆண்டு களாக நிறுத்தப்பட்டுள்ள பிரம்மோற்சவம், இந்தஆண்டாவது நடத்த, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வேளச்சேரியில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கருணாம்பிகை சமேத தண்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், திருக்கடையூருக்கு நிகராக பிரசித்தி பெற்றது.
தல வரலாறு: சாபம் தீர சிவனை வழிபட்ட எமனுக்கு, காட்சி தந்து, தண்டம் கொடுத்து, பணி செய்யும்படி அறிவுறுத்தி அருளினார். எனவே இத்தலத்து சிவன், தண்டீஸ்வரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. வேதங்கள், இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், வேதச்சேரி என்றழைக்கப்பட்டு, பின்பு, வேளச்சேரி என்று மருவியதாகவும் கூறப்படுகிறது. வேதஸ்ரேணி என்பது, இத்தலத்தின் புராணப் பெயர். முதலாம் ராஜராஜசோழனின் தந்தையாகிய, சுந்தரசோழனால் இக்கோவில் கட்டப்பட்டதாக, கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. திருக்கடையூருக்கு இணையாக, இங்கும் மக்கள், 60, 80ம் வயது திருமணம் மற்றும் ஆயுள் விருத்தி ஹோமங்களை செய்கின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம், 1973ல் நடைபெற்றது. 1975ல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பிரம் மோற்சவம் நடைபெற்றது. அதன்பின், தற்போது வரை பிரம்மோற்சவம் நடைபெறவில்லை.
கோவிலுக்கான செயல் அலுவலர்கள் பலர் மாறியும், பிரம்மோற்சவத்திற்கான பணிகள் மட்டும், கிடப்பில் போடப்பட்டதாக, பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, ஆன்மிக நல விரும்பிகள் சிலர் கூறியதாவது: தண்டீஸ்வரர் கோவில், 1973ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, பிரம்மோற்சவமும், தேரோட்டமும் நடத்தப்பட்டது. பின், அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கோவில் சென்றதால், இவற்றை நடத்துவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், பல ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நிறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்பு: கோவிலை சுற்றி நான்கு மாட வீதிகளிலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. இனி, தேரோட்டம் நடத்த வழியில்லை. பிரம்மோற்சவத்தையாவது நடத்த, அறநிலையத்துறை முன்வர வேண்டும்.கோவிலுக்கு சொந்தமாக, வேளச்சேரி மற்றும் ஆலந்துார் பகுதிகளில் உள்ள சொத்துகளும், முறையாக பராமரிக்கப்படவில்லை. கோவில் நிலங்களை ஆக்கிரமித்து, பலர் வீடுகள் கட்டியுள்ளனர்; அவற்றை மீட்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அறநிலையத்துறை : தரப்பில் கூறியதவாது: அறநிலையத்துறை வசம் வரும் முன், ஊர் கோவிலாக இருந்தபோதே, தேரோட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, பிரம்மோற்சவத்திற்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் சித்திரை மாதத்தில், பிரம்மோற்சவம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான சொத்துகள், கிழக்கு மாட வீதி, கருணாம்பிகை காலனி, தண்டீஸ்வரர் காலனி, அம்பேத்கர் காலனி மற்றும் தரமணி இணைப்பு சாலை உள்பட, பல இடங்களில் உள்ளன. அவற்றில் வாடகை வசூலித்து வருகிறோம். இவ்வாறு கூறப்பட்டது.