பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
ஈரோடு: ஈரோடு வ.உ.சி. பார்க் ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த, அனுமன் ஜெயந்தி விழாவில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்தது. சிறப்பு தரிசனத்தின் மூலம், ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. ஈரோடு வ.உ.சி., பூங்காவில் சுயம்புவாக மஹாவீர் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் மார்கழி மூல நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமனை தரிசித்து செல்வர். அறநிலையத்துறை சார்பில், சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்வது வழக்கம். நடப்பாண்டு டிச., 24ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், வழக்கமான உற்சாகத்துடன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு தரிசனத்துக்கு 25, 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், அதிகமான பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட்டை விரும்பி வாங்கினர். டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்தது. ஒரே நாளில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்தது. கோவில் ஊழியர்கள் கூறுகையில், ""சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள், காந்தி சிலை முன்பிருந்து, வரிசையாக கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு வழிப்பாதையில் பக்தர்களுக்குள் நெரிசல் ஏற்பட்டதால், நீண்ட வரிசையை தவிர்க்க பெரும்பாலான பக்தர்கள் விரும்பினர். எனவே, சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை ஜோராக நடந்தது. அனுமன் ஜெயந்தி சிறப்பு தரிசனத்தால் மட்டும், ஒரு லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது, என்றனர்.