பதிவு செய்த நாள்
27
டிச
2011
12:12
சேலம் : சேலம், குமரகிரி முருகன் கோவில் மலைப்பாதை பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சேலம், அம்மாபேட்டை அருகே குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் மலைமேல் அமைந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு செல்ல படிக்கட்டு வசதி உள்ளது. பக்தர்கள் வசதிக்காக, மலைப்பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போத நிறைவடையும் தருவாயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருப்பதால், பக்தர்கள் தங்குவதற்கு கோவிலில் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் அமர்ந்து சாப்பிடுவதற்கு பெரிய ஹால் வசதி உள்ளது. குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில் மலைப்பாதை அமைப்பதற்காக, கோவில் நற்பணி மன்றத்தின் சார்பில், கடந்த 27.8.2000ம் ஆண்டு பணிகள் துவங்கியது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 2009-10ம் ஆண்டு, 84 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய், குமரகிரி தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில் நற்பணி மன்றத்தின் சார்பில், 28 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 7,000 ரூபாய் செலவில் மலை பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் குறித்து, மலைப்பாதை திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: மலையை சுற்றி, தார் ரோடு அமைக்கும் பணிக்கான துவக்க விழா, கடந்த 2000ல் அப்போதைய அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்குடிமகன் ஆகியோரால் துவக்கி வைக்கப்பட்டது. கீழே இருந்து மலையில் உள்ள கோவிலுக்கு செல்ல, இரண்டே கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் ரோடு போடப்பட்டுள்ளது. கோவில் அருகே, 50 அடி தூரத்துக்கு முதியவர்கள் நடந்து செல்லும் வகையில், சாய்வுதளம் அமைக்கும் பணி நடக்கவுள்ளது. மலைப்பாதை ஓரம் "ரிப்ளக்டர் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.