பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
பஞ்ச பூதங்களை அடக்கி உலகை காக்கும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து பல பாடங்களை கற்று கொடுத்து சென்றிருக்கிறது. சிறந்த ஸ்தபதிகளை கொண்டு பழமை மாறாமல் ஏற்கனவே பதிவு செய்த வீடியோகாட்சிகளை கொண்டு கோயிலை புனரமைக்க வேண்டும். கோயிலின் புனிதம் அனைத்து நிலைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகம விதி கடைபிடிக்கப்பட வேண்டும். கோயில் வளாகத்தில் வழிபாட்டுக்குரிய பூஜை பொருட்கள் மட்டுமே விற்க அனுமதிக்கப்பட வேண்டும். ஆறுதல் தேடி வரும் பக்தர்களை கோயில் பணியாளர்கள் விரட்டுதல் கூடாது. கோயிலின் வருமானத்தை கோயில் பராமரிப்புக்கு மட்டுமே கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது வியப்பு தருகிறது. -ஜெயஸ்ரீ, குடும்பத்தலைவி, மதுரை
நீதி விசாரணை தேவை: மீனாட்சி கோயில் தீ விபத்து குறித்து ஆய்வு செய்ய ஒரு நீதி விசாரணை குழுவை அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கோயில்களுக்குள் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாடகை பாக்கியை முறையாக வசூலிப்பது இல்லை. கோயில் கடை வியாபாரிகளும், அறநிலையத்துறை அதிகாரிகளும் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டு அநியாயமான விலைக்கு பொருட்களை விற்று பக்தர்களை ஏமாற்றி சுரண்டுகிறார்கள். இதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.- காடேஸ்வர சுப்பிரமணியன், மாநிலத் தலைவர், இந்து முன்னணி, சென்னை
புனரமைப்பு பணி செய்யுங்கள்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை வீதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள், மழை நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இப்பணி முறையாக நடக்காததால் மழையால் வெள்ள நீர் கோயிலுக்குள் பெருக்கெடுத்து ஓடியது. இப்பணியை மறு நிர்மாணம் செய்ய வேண்டும். தற்போது பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டதால் பழமையும், புராதன சிறப்பும், கலையம்சமும் மிக்க வீர வசந்தராயர் மண்டபம் உருக்குலைந்து போனது பக்தர்களிடையே தீராத வடுவை ஏற்படுத்தி விட்டது. இதற்கு பிராயசித்தமாக புனரமைப்பு பணியையாவது பழமை மாறாமல் மேற்கொள்ள வேண்டும். இப்பணியை ஆறு மாதத்திற்குள் முடிக்க கோயில் நிர்வாகம் முழு கவனம் செலுத்த வேண்டும். வழிபாட்டு தலங்களை வர்த்தக ஸ்தலமாக மாற்றக்கூடாது. கடைகளை காலி செய்து, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பி.அழகர்சாமி, ரஜினி மன்ற நிர்வாகி, மதுரை.
அரசியல் இருக்கக் கூடாது: மீனாட்சி கோயிலில் பிரசாதம் தரமாக தயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காலணி பாதுகாக்கும் இடத்தில் பூஜை பொருட்களை விற்பது பக்தியை கொச்சைபடுத்துவது போல் உள்ளது. மன அமைதியுடன் தரிசனம் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் செய்ய வேண்டும். கோயில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. வெளியூர் பக்தர்கள் தங்கி தரிசனம் செய்ய காத்திருப்பு அறைகளை அமைக்க வேண்டும். கோயிலையும், பக்தர்களையும் பாதுகாக்க வேண்டியது கோயில் நிர்வாகத்தின் கடமை.- எஸ்.அங்குசாமி, சமூக ஆர்வலர், மதுரை.
மதுரை மீனாட்சி கோயில் நமது பொக்கிஷம். இக்கோயிலை இயற்கை சீற்றம், விபத்துக்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேட்டில் இருந்து காப்பது நம் கடமை. மீனாட்சி கோயிலின் பழம்பெருமை, புராதனம் காக்க விரும்பும் வாசகர்கள், பல்துறை வல்லுனர்கள் அதற்கான ஆலோசனைகளை ’மீனாட்சி கோயிலை காப்போம், தினமலர்,டி.வி.ஆர்., ஹவுஸ், தினமலர் அவென்யூ, மதுரை - 625 016’என்ற முகவரிக்கு தங்கள் புகைப்படத்துடன் அனுப்பலாம். mdureporting@dinamalar.in