மதுரை, ”கோயில்கள் வியாபாரத்தளமாக இருக்கக் கூடாது. ஓட்டு குறையும் என்பதால் கோயில் கடைகளை அகற்ற அரசியல்வாதிகள் மறுக்கின்றனர்,” என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.மதுரை மீனாட்சி கோயிலில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசந்தராய மண்டபத்தை பார்வையிட வந்த அவர் கூறியதாவது:மீனாட்சி கோல் தமிழ் பண்பாடு பேசும் கலை நயமிக்க கோயில். மிகவும் வருத்தமாக கோயிலுக்கு வந்தேன். ஆனால் தீ விபத்து ஏற்பட்ட வீரவசந்தராய மண்டபம் அருகே ஆயிரங்கால் மண்டபம் சேதமடையாமல் இருந்தது ஆறுதல்.மீனாட்சி கோயிலில் பல ஆண்டுகளாக கடை வைத்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், 1961 முதல் தான் கடைகள் வைத்துள்ளதாக கோயில் ஆவணம் சொல்கிறது. கோயில்கள் வியாபாரத்தளமாக இருக்கக் கூடாது, தமிழகம் முழுவதும் கோயிலுக்குள் உள்ள கடைகளை அகற்ற வேண்டும். கோயில் கடைகளை அகற்றினால் சில ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படும். அதற்காக கோயிலை வியாபாரத்தளமாக மாற்றிவிடக் கூடாது, என்றார்.மாவட்ட செயலர் பூமிநாதன், மாநில தொழிற்சங்க நிர்வாகி மகபூப் ஜான், நிர்வாகிகள் உடனிருந்தனர். வழக்கமாக கருப்பு துண்டு அணிந்திருக்கும் வைகோ, அதை கழற்றி நிர்வாகியிடம் கொடுத்து விட்டு கோயிலுக்குள் சென்றார்.