பதிவு செய்த நாள்
17
பிப்
2018
12:02
ஊத்துக்கோட்டை : அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த ஊஞ்சல் சேவையில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ளது, அங்காள பரமேஸ்வரி அம்மன் உடனுறை ஓங்காட்டீஸ்வரர் கோவில்.பழமை வாய்ந்த இக்கோவிலில், மாசி மாதம் தோறும், அம்மனுக்கு மயான கொள்ளை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, கடந்த, 11ம் தேதி, கோவிலில், அம்மனுக்கு பொங்கலிட்டு, படையலிடப்பட்டது. 13ல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் மாலை, மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு, ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி, கிராமிய நடனம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில், போலீசார் ஈடுபட்டனர்.ஊத்துக்கோட்டை அடுத்த, எல்லம்பேட்டை கிராம அங்காள பரமேஸ்வரி மற்றும் பெரியாயி அம்மனுக்கு, மாசி மாத அமாவாசை தினத்தை ஒட்டி நடந்த ஊஞ்சல் சேவையில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக, கிராம மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து இறைச்சி உணவை எடுத்து வந்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். அந்த உணவு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. பின், உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.