பதிவு செய்த நாள்
17
பிப்
2018
12:02
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவில் அருகே கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பதால், பக்தர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி முருகன் கோவிலின், துணைகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில் ரத்தின சபையாக விளக்குகிறது.
சிறப்பு பூஜைகள்: இங்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, மூலவரை வழிபட்டு செல்கின்றனர்.குறிப்பாக, தமிழகம், ஆந்திரா உட்பட, பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். பிரதி சனிக்கிழமை மாந்திரீகம் என்கிற பரிகார சிறப்பு பூஜைகள் நடந்து வருவதால், அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். இங்கு வருவோருக்கு, இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு போதிய கழிப்பறை இல்லாததால் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் பக்தர்கள் கோரிக்கை ஏற்று கோவில் வளாகத்தில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இருபாலருக்கும் புதிதாக கழிப்பறை கட்டியது.இக்கட்டட பணிகள் முடிந்து ஆறு மாதங்கள் ஆகியும், இதுவரை பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பக்தர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பயன்பாட்டிற்கு விடாமல் உள்ள கோவில் கழிப்பறைகளை திறந்து விட வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திறக்கக்கூடாது: இது குறித்து, கோவில் அதிகாரி கூறியதாவது: கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை திறப்பதற்கு, நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், கோவில் தெருவில் உள்ள சில நபர்கள், கோவிலில் கழிப்பறை திறக்கக்கூடாது என, தடுக்கின்றனர். இருப்பினும், ஓரிரு நாளில் கழிப்பறைகள் திறந்து, பயன்பாட்டிற்கு விடப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.