பதிவு செய்த நாள்
17
பிப்
2018
12:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதற்கு கடைகளில் அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை குவித்து வைத்திருந்ததே காரணம்,” என தீயணைப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இக்கோயிலில் கடந்த பிப்.,2ல் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ விபத்து குறித்து ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தீயணைப்புத்துறைக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டிருந்தார்.துணை இயக்குனர் சரவணக்குமார் தலைமையில் மதுரை, தேனி, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் தீயணைப்பு அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் அடங்கிய குழு வீர வசந்தராயர் மண்டபம், தீ விபத்தில் இருந்து தப்பிய பழைய திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சுவாமி சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தது.கலெக்டரிடம் அவர்கள் நேற்று தாக்கல் செய்த அறிக்கை விபரம்: கோயிலில் தீத்தடுப்பு கருவிகள் பெயரளவுக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. தீத்தடுப்பு நடவடிக்கையில் கோயில் நிர்வாகம், கடைக்காரர்கள் மெத்தனமாகவே இருந்துள்ளனர்.
தீப்பிடித்த பகுதி கடைகளில் அட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு குவித்து வைத்திருந்ததே விபத்துக்கு காரணம். கோயிலுக்கு அருகிலேயே திடீர்நகர் தீயணைப்பு நிலையம் உள்ளது. ஆனால் மேற்கு, கிழக்கு, வடக்கு கோபுர வாசல் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் வழித்தடங்களும் வாகனங்களை நிறுத்தியும், கடைகள் வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தீ விபத்து நடந்தாலும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.