பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயிலுக்கு இரவில் அரசு பஸ் வசதி இல்லாததால், பக்தர்கள் பெரிதும் பாதிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வட, தென் மாநிலத்தில் இருந்து தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் பகல், இரவு முழுவதும் அரசு பஸ், ரயிலில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்குவார்கள். இங்கிருந்து 2.5 கி.மீ.,துாரமுள்ள கோயிலுக்கு செல்ல அரசு டவுன் பஸ் சேவை உள்ளது. இதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூபாய் 6ம், அதே சமயத்தில் ஆட்டோவுக்கு ரூபாய் 60 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இரவு 10:00 மணிக்கு பிறகு டவுன் பஸ் போக்குவரத்து இல்லாததால், நள்ளிரவில் ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், ஆட்டோவை தேடி செல்லும் அவலம் உள்ளது. சில பக்தர்கள் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் ஒய்வெடுப்பதால் திருடர்கள், சமூக விரோதிகளால் தொல்லை ஏற்பட்டது.
இதனை தவிர்க்க 2010ல் ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்கம் முயற்சியால், இரவு 10:00 மணிக்கு பிறகு ராமேஸ்வரம் வரும் அனைத்து வெளியூர் பஸ்களும் கோயில் வரை செல்ல மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதனை ஒரு சில ஆண்டுக்கு பின்பற்றிய டிரைவர்கள், நடத்துநர்கள் காலபோக்கில் கண்டு கொள்ளாமல் விட்டனர். இதனால் தற்போது ஒருசில பஸ்கள் தவிர அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் தவிக்கும் பக்தர்கள் ஆட்டோக்களை தேடி செல்கின்றனர். சிலர் கோயிலுக்கு நடந்தே செல்வதால் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே உத்தரவை காற்றில் பறக்க விடும் பஸ் டிரைவர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுத்து இரவு 10:00 மணிக்கு பிறகு வெளியூர் பஸ்கள் கோயில் வரை செல்ல மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.