பதிவு செய்த நாள்
19
பிப்
2018
01:02
குன்னுார்;அருவங்காட்டில் முத்தப்பன் திருவப்பன திருவிழாவில், பள்ளி வேட்டை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.அருவங்காடு பகுதியில், முத்தப்பன் பக்த ஜன சமிதியின் சார்பில், 10வது ஆண்டு முத்தப்பன் திருவப்பன திருவிழா கடந்த 2 நாட்களாக நடந்தது. கேரள மாநில கண்ணுார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆதிசிவனான முத்தப்பன் பள்ளிவேட்டை நடந்தது. செண்டை வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய நடனத்துடன், அம்பு செலுத்தி தேங்காய் உடைத்தல், வாள், அம்புகளுடன் நடனம் ஆகியவை பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. பின்னர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சிறுமியரின் தாலப்பொலி ஊர்வலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். திருமுடி சார்த்தல், பள்ளிவேட்டை, தீபாராதனை, பய்யம்குட்டி, மலையேற்றம் ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை சமிதி நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவில் நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் முனீஸ்வரர், கருப்பண்ணசாமி போன்று கேரளாவில், கண்ணுார் மாவட்டத்தில் பரிசினிக்கடவில் உள்ள முத்தப்பன் கோவிலில் ஆதிசிவன் முத்தப்பன் என அழைக்கப்படுகிறார். இங்கு சிவனுக்கு மீன், கள் போன்றவற்றை படையலிட்டு பக்தர்கள் வழிபடும் கோவிலாக உள்ளது. கோவிலில் தினமும் அருள்வாக்கு நடத்தப்படுகிறது. இங்கு ஆதிசிவன்,மகாவிஷ்ணு, ஆகியோரை போற்றும் வகையில், முத்தப்பன், திருவப்பன் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்படுகிறது. கலாசாரத்தை மேம்படுத்தும் வகையிலும், பக்தர்களுக்கு பயனுள்ள வகையிலும், நீலகிரியில் இங்கு ஆண்டுதோறும் சமிதி சார்பில் முத்தப்பன் திருவப்பன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.