சிலர் விதண்டாவாதமாகப் பேசுவர். மது குடிப்பவனிடம், இது உடலுக்கு கேடு ஏன் குடிக்கிறாய்?” என்றால், “அப்படியானால், ஆண்டவன் இதை ஏன் படைத்தான்?” என்பான். சரி... ஆண்டவர் பாவச்செயல் செய்யாதே என சொல்லியுள்ளார். நீ ஏன் செய்கிறாய்? என்றால், “அது....” என பதில் சொல்ல முடியாமல் இழுப்பான். அதாவது உலகில் நல்லதும் கெட்டதும் உள்ளன. வானத்தையும், பூமியையும், மரங்களையும், செடிகளையும், இன்னும் பல நல்லனவற்றையும் ஆண்டவர் படைத்தார். மது போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. ஆண்டவரை மதிக்காத காரணத்தால், முதல் மனிதர்களான ஆதாமும், ஏவாளும் நிர்வாண நிலையை அடைந்தனர். எனவே ஆண்டவரால் விலக்கப்பட்ட பொருட்களை மனதாலும் நினைக்கக்கூடாது. அவர் அருளிய நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மனிதர்கள் உருவாக்கிய கெட்டவைகளை விலக்கி விட வேண்டும். கெட்டதை பயன்படுத்தினால், விரைவில் மரணம் நேரிடும்.மனுஷனுக்கு செம்மையாய் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரணம்” என்றும், பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது பைபிள். ஆம்...தான் செய்வதெல்லாம் நியாயம் என நினைத்து, பாவம் செய்கிறவர்கள் முடிவில் மரணத்தையே சந்திப்பர்.