பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், சாலையில் இருந்து அகற்றப்பட்ட நிழற்கூரையை, மீண்டும் பொருத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல், நரசிம்மர் கோவிலில் இருந்து, ஆஞ்சநேயர் கோவில் வரை செல்லும் நடைபாதையில் பக்தர்கள் சார்பில் நிழற்கூரை அமைக்கப்பட்டது. ஆஞ்சநேயர் ஜெயந்தியின் போது, கூட்டம் அதிகரிப்பால், அது அப்புறப்படுத்தப்பட்டது. அடுத்த சில வாரத்திலேயே, வைகுண்ட ஏகாதசிக்காக, அரங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வரிசைக்காக பயன்படுத்தப்பட்டது. மீண்டும், அந்த பக்தர்கள் நடைபாதை நிழற்கூரை குளக்கரை திடல் அருகேயே வைக்கப்பட்டுள்ளது. தற்போது, வெயில் காலம் துவங்கியுள்ளதையடுத்து, நரசிம்மர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு கடும் வெயிலில் வெறுங்காலுடன் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர், சூடு தாங்காமல் அவதிப்படுகின்றனர். நிழற்கூரையை மீண்டும் பொருத்த, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.